முக்கிய செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் தங்கள் வருகைக்கு மிக்க நன்றி தங்களின் மேலான கருத்தை இங்கு பதிவு செய்யவும். உங்களின் இடம், வீடு, கடை, விற்பனை செய்ய இதில் இலவசமாக விளம்பரம் செய்து பயனடையுங்கள்.

Thursday, August 28, 2014

பால்காரர் முதல் பிளம்பர் வரை... பெண்களுக்கு காவல்துறை முன்னெச்சரிக்கை அறிவுரை


சென்னை: பால்காரர் தொடங்கி பிளம்பர் என்று பலரையும் நேரடியாகச் சந்திக்கும் பெண்கள் எப்போதும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் காவல்துறையினர் அறிவுரை வழங்கினர்.


சென்னையில் சமீப நாட்களாகப் பெருகிவரும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், ஒரு சில இடங்களில் காவலர்களே சட்டத்தை மீறி நடந்த சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியதால் காவல்துறை மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுணர்வை ஏற்படுத்தும் வகையிலும் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் காவல்துறை பொதுமக்கள் விழிப்புணர்வு கூட்டங்கள் சென்னை முழுவதும் நடைபெற்று வருகின்றன. அதுபோன்றதொரு ‘காவல்துறை- சீனியர் சிட்டிஷன் விழிப்புணர்வு  கலந்தாய்வு கூட்டம் ’நீலாங்கரை பகுதியில் நடைபெற்றது. பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் எளிதாக ஏமாறும் விஷயங்களை அடையார் சரக காவல்துறை இணை ஆணையர் கண்ணன் விளக்கி பேசுகையில்,

"காலையில் பால்காரர் தொடங்கி, பேப்பர்காரர், பழைய பொருட்கள் வாங்குபவர்கள், குறிப்பாக ஒரு சேலைக்கு இரண்டு சேலை என்று பெண்களிடம் ஆவலை ஏற்படுத்தி விற்பனை செய்பவர்கள், வீட்டு வேலைக்கு வருபவர்கள், தண்ணீர் கேன் போடுபவர், மெக்கானிக், பிளம்பர்.... என்று பலரையும் நேரடியாகச் சந்திப்பவர்கள் பெண்கள்தான். எனவே இவர்கள் எப்போதும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வீட்டுக்கு வருபவர்கள் பற்றிய விவரங்கள் தெரிந்திருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும். வேலைக்கு வைப்பவர்கள் பற்றி போட்டோவுடன் கூடிய விவரங்களை வைத்துக் கொள்ள வேண்டும்.

நகைகளை வீடுகளில் வைக்காமல் வங்கி லாக்கர்களில் வைப்பது பாதுகாப்பானது. திருமணம், கோயில் விழாக்கள் என்று போகும்போதும் அதிக அளவில் நகைகளைப் போட்டுச் செல்ல வேண்டாம். தங்கம் அதிகமாக அணிந்து கொண்டு கூட்டமான பேருந்துகளில் பயணிப்பதைத் தவிர்க்கவேண்டும். ஆட்டோக்களில் செல்லும் போது வீட்டு விவரங்களையோ, வெளியூர் செல்வதையோ மற்றவர்கள் கேட்கும்படி பேச வேண்டாம். நாங்கள் காவலர்கள்தான். இந்தப் பகுதியில் கலவரமாக இருக்கிறது. நகைகளை அணிந்து செல்லாதீர்கள் என்று சில மூதாட்டிகளிடம் நகைகளைக் கழட்டி பத்திரமாக மடித்துத் தருவதாகக் கூறி அபேஸ் செய்த நிகழ்வுகளும் நடந்திருப்பதால், காவலர் என்று கூறினாலும் நம்பி விடவேண்டாம். உஷாராக இருங்கள். இப்படியெல்லாமா நடக்கும் என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வுகளும் குற்ற வழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆண்களும் வங்கிகளுக்குச் சென்று பணம் எடுத்து வருகையில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் கவனத்தை திருப்பி பணத்தை எடுத்துச் செல்லும் நோக்கில் சிலர் இருப்பார்கள். அதற்கு இடமளிக்கக்கூடாது. பல லட்சம் செலவு செய்து வீடு கட்டுபவர்கள், நல்ல கேட்டுகளையும் பூட்டுகளையும் பயன்படுத்துங்கள். திரைச்சீலைகளையும், சிசிடிவி கேமராக்களையும் பயன்படுத்துங்கள்.

அறிமுகம் இல்லாத நபர்கள் நடமாட்டம் இருந்தாலோ, தேவையற்ற வாகங்கள் நிறுத்தப்பட்டிருந்தாலோ அதுகுறித்து உடனடியாகப் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கலாம். வயது முதிர்ந்தவர்கள் யாராவது தனியாக வீடுகளில் இருந்தால் அது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால், அவர்கள் பகுதியில் ரோந்து காவலர்கள் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். திருட்டு நடந்த பின் பாதிக்கப்பட்டுவிட்டேனே என்பதை விட முன்பே கவனமாக இருந்து காவல்துறைக்கு உதவினால் எந்தத் திருட்டுகளையும் நிறுத்திவிடலாம்’’ என்று ஆலோசனைகளையும் கூறினார்.

கலந்தாய்வின் போது, நீலாங்கரை உதவி ஆணையர் சங்கர், ஆய்வாளர்கள் எம்.எஸ்.பாஸ்கரன், ஜெய்கிருஷ்ணன் ஆகியோரிடம் பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க அது தொடர்பாக எடுக்கும் நடவடிக்கைகளையும் அங்கேயே தெரிவித்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்த 192வது வார்டு கவுன்சிலர் எம்.சி.முனுசாமி, சரஸ்வதிநகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வாசகங்களோடு காவல்துறையினரின் தொலைபேசி எண்கள், முக்கிய தொலை பேசி எண்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இந்த முன்மாதிரி நிகழ்ச்சிகள் வெறும் சம்பிரதாய சடங்காக மட்டும் நின்று விடாமல் செயல்வடிவம் பட்டால்தான் காவல்துறையினர் மீதான பொதுமக்களின் நம்பிக்கையும், மரியாதையும் கூடும்.

- மு.செய்யது முகம்மது ஆஸாத்

- விகடன்

No comments:

Post a Comment

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது இஸ்லாமிய பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு! எனவே மற்றவரின் அந்தரங்க வாழ்வை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும்