நியூயார்க்கில் ‘ஹலால்’ இறைச்சிக்கூடம்
மூன்று அமெரிக்க முஸ்லிம்களின் முயற்சியால் நியூயார்க் நகரில், ஹலால் இறைச்சி விற்பனைக்காக, பாதுகாப்பான அறுக்கும் கூடம் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு சமயம் சார்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் கவனத்தை இக்கூடம் ஈர்த்துள்ளது. மேன்ஹெடன் தெருவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு இது அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. இறைக்கட்டளைக்கேற்ப, தூய்மையான முறையில் அறுக்கப்படும் இறைச்சி தங்களுக்குக் கிடைப்பதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இந்த இறைச்சிக்கூடத்தின் தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு காணப்படுகிறது. இங்கு கால்நடைகள் இயற்கையான முறையில் பராமரிக்கப்படுகின்றன. ஹார்மோன்களோ செயற்கை கருத்தரிப்புகளோ கிடையாது. எனவே, முஸ்லிமல்லாத வாடிக்கையாளர்களிடமும் வரவேற்பைப் பெறுகிறது. இக்கூடத்தின் வாடிக்கையாளர்களில் 60 விழுக்காடு முஸ்லிமல்லாதவர்களே!
இதற்கிடையே, கலிஃபோர்னியா மாநிலத்தின் சான்டீகோ நகர முஸ்லிம் குடும்பங்களில் பலர், பள்ளிகளின் உணவுப் பட்டியலில் ஹலால் உணவையும் சேர்க்க வேண்டும் என்று கோரிவருகின்றனர். இஸ்லாமிய ஷரீஆ முறைக்கு ஏற்ற உணவுகள் பள்ளியில் இல்லாததால் மாணவர்கள் பள்ளி உணவுகளைத் தவிர்த்துவருகின்றனர்.
இதையடுத்து, சோமாலியாவைச் சேர்ந்த பிலால்மூயா ‘உணவு நீதி இயக்கம்’ என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளார். கல்வித் துறை பொறுப்பாளர்கள், அதிகாரிகளுடன் சந்திப்புக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து, இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்கின்றனர். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முஸ்லிம்களும் பங்கெடுத்துக்கொள்கின்றனர்.